அகத்தியர் என்றால் நம் நினைவுக்கு வருவது மற்றும் வரவேண்டியது சிவன் தான். ஏனென்றால் அகத்தியர் சிவனின் பக்தர்.அப்படி அவர் வழிபட்ட சிவாலயங்கள் பல உண்டு என்றாலும் அவர் பூஜித்த பெருமாள் கோவில்கள் அபூர்வம் தான்.அப்படி அவர் பூஜித்த பெருமாள் ஆலயங்களுள் ஒன்றுதான் ஒகேனக்கல் அருகில் ஊட்டத்தூர் எனும் ஊரில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலாகும்.இந்தக் கோயில் அகத்தியர் சிவபூஜையோடு பெருமாளையும் வழிபட்டதற்கான சாட்சி ஆகும்.
தல வரலாறு:
ஒரு முறை அகத்தியர் தென் திசை சென்று வந்தார்.அப்பொழுது அவரை பொன்னி நதி வழிமறித்தது.கோபம் கொண்ட அகத்தியர் அந்த நதியை கமண்டலத்தில் அடைத்துவிட்டார்.அதனால் பூலோகத்தில் தண்ணீர் பஞ்சம் வந்தது.அப்பொழுது அனைவரும் சிவபெருமானை வேண்டினர். அப்பொழுது விநாயகப் பெருமானுக்கு ஆணை இட்டார் எம்பெருமான்.அவ்வண்ணமே வினை தீர்க்கும் விக்னேஸ்வரர் காகம் வடிவில் வந்து அந்த கமண்டலத்தைத் தட்டிவிட்டார்.பின்பு அந்தக் கமண்டலத்தில் உள்ள நீர் காவிரியாக விரிந்து பாய்ந்தாள்.அப்பொழுது அகத்தியர் நீரை அடைத்து நிலத்தை வருத்திய பாவம் நீங்க நதிக் கரையில் பல கோயில்களை உருவாக்கி வழிபட்டார்.அப்படி அகத்தியர் ஆராதித்த கோயிகளில் ஒன்று தான் இது.
பழங்காலத்து மன்னர்களும், சித்தர்களும், மகான்களும் வழிபட்டு வந்த இந்தக் கோயில் நாளடைவில் பொலிவிழந்து புதைந்து போனது.மண்ணில் புதையுண்ட பெருமாள் உரிய காலத்தில் பக்தர்கள் பார்வையில் பட்டதால் இந்தக் கோயில் புதிப்பிக்கப் பட்டது.
இங்கு கருடாழ்வார்,ஆஞ்சநேயர் சன்னதிகளோடு ஸ்ரீ தேவி – பூதேவி சமேதராக தரிசனம் அளிக்கிறார், சென்றாய பெருமாள்.சங்கும்,சக்கரமும் கொண்டு அருள்பாலிக்கும் முத்திரையுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள்.வெளிச் சுற்றில் ராகுவும் கேதுவும் உடனிருக்க அவர்களது நடுவே அமர்ந்து அருள்கிறார் விநாயகப் பெருமான்.இப்படி ஒரு வித்யாசமான அமைப்பில் கேதுவும் ராகுவும் இருப்பதால் இங்கு ராகு,கேது தோஷப் பரிகாரங்கள் நடத்திவருகின்றனர்.
காவிரி பாயும் இந்த திருத்தலம் அந்தக் காவிரியையே தீர்த்தமாக வியாசர் தீர்த்தம் எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு இங்கு மக்கள் தம் முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவதும் ஆகும்.
நாமும் இந்த சென்றாய பெருமாள் கோவிலுக்குச் சென்று மோட்ச தீபம் ஏற்றி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று வாழலாமே!!
The post அகத்தியர் பூஜித்த சென்றாய பெருமாள் appeared first on Swasthiktv.