நினைத்த மாத்திரத்தில் கடவுளை தரிசிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது. அப்படி தரிசித்தவரும் இருந்தார்.வாருங்கள் அவரைப் பற்றி பார்ப்போம்.
17 ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த வில்வ மங்களம் சுவாமிகள் தான் அவர்.நினைத்த போது கடவுளை தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்.இவர் ஒரு முறை இந்தப் பகுதியை ஆண்ட செண்பக சேரி ராஜாவுடன் படகில் போய்க்கொண்டிருந்த போது ஒரு இனிய வேங்குழல் ஓசை கேட்டது.அப்பொழுது ஒரு ஆலமரத்தடியில் குழந்தை வடிவக் கண்ணன் புல்லாங்குழல் ஊதும் காட்சி வில்வமங்களம் சுவாமிகளுக்குத் தெரிந்தது.ஆனால் அது அந்த ராஜாவிற்கு தெரியவில்லை.கவலையுடன் ராஜா வில்வமங்களம் சுவாமிகளிடம் ஏன் கண்ணன் எனக்கு காட்சி தர மாட்டாரா?என்று கேட்க சுவாமிகளும் கண்ணனிடம் வேண்ட மறு நொடியே கண்ணன் அந்த ராஜாவுக்கு காட்சியளித்தார்.
இவ்வாறு கண்ணன் காட்சி அளித்ததன் பயனாக அந்த ஆலமரத்தின் அடியிலே ஒரு கோயிலைக் கட்டினாராம் ராஜா.அம்பலம் என்றால் கோயில்,புழை அருகில் அம்பலம் உள்ளதால் அம்பலப்புழை என்ற பெயர் உருவானதாம்.கண்ணன் குழலூதி வில்வமங்களம் சுவாமிகளுக்கு காட்சி அளித்த ஆலமரம் இன்றும் கணபதி ஆல் என்ற பெயரில் கோயிலுக்குப் பின்புறம் உள்ளது.
இங்கு பிரதிஷ்டை செய்த சிலையை ஒரு நம்பூதிரி குறை உள்ளதாக லேசாக தட்ட அந்த சிலையின் கை உடைந்து விழுந்ததாம்.உடனடியாக புது சிலை வேண்டுமானால் மன்னருக்கு பகை இருந்த இடத்திலிருந்து கொண்டு வர வேண்டியிருந்தது அப்பொழுது ஒரு பணிக்கர் குறிச்சியிலிருந்து அந்த சிலையை கடத்தி இட்டித் தோமன் என்ற பிறமதத்தவர் வீட்டில் ரகசியமாக மறைத்து பின் இரவில் கொண்டு வரப்பட்டது.இன்றும் கிருஷ்ணனை மறைத்து வைத்த வீட்டில் இன்றும் அந்த அறையில் விளக்கேற்றி வருகிறார்களாம்.
இந்தக் கோவிலில் கண்ணனின் சிலை கருவறையில் பொருத்தப் பட்டபோது அது சரிந்ததாகவும் பின் அதன் கீழ் ஒரு வெற்றிலையை செருகியதும் அந்த சிலை நன்றாகப் பொருந்தியதாகவும் அதனாலே “தாம்பூலப் புழை ” என்று பெயர் பெற்று அது காலப்போக்கில் “அம்பலப் புழை” என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு.
அம்பலப் புழை கோவிலில் முக்கிய நிவேதனம் பால் பாயசம். இங்கு நிவேதனம் செய்யும் பால் பாயசத்தை சாப்பிட அந்த குருவாயூர்க் கண்ணனே மதியநேரம் இங்கு வந்து போவதாக ஒரு ஐதீகம்.தினமும் நூறு லிட்டர் பால் பாயசம் தயார் செய்கிறார்கள்.இந்த பாயசத்திற்கான பாலை தினமும் காலையில் குளித்து,வெண்ணிற ஆடையில் பெண்கள் குடங்களில் ஏந்தி கோயிலுக்கு கொண்டுவருகிறார்கள்.முதலில் முக்கிய நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த பாயசம் ,1959 ம் ஆண்டு முதல் அனைத்து பக்தர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த பிரகாரத்தில் உள்ள கிணற்று நீர் தான் அபிஷேகம் முதல் பாயசம் செய்வது வரை உபயோகப்படுத்தப் படுகிறது.ஒரு பெரிய வெண்கல உருளியில் பாலைக் காய்ச்சி ஆதில் நன்கு கழுவிய அரிசியைப் போட்டு பின் அதை நன்கு காய்ச்சிய பிறகு சர்க்கரை சேர்த்து பாயசம் தயாராகிறது.
திருப்பதிக்கு லட்டு போல அம்பலப்புழைக்கு பால் பாயசம் எப்படி வந்தது என்று ஒரு கதை உண்டு.என்னவென்றால்……
ஒரு முறை இந்த நாட்டில் பஞ்சம் வந்தது.அப்பொழுது ராஜா ஒரு செல்வந்தரிடம் நெல் மூட்டைகளை கடனாகப் பெற்றார்.ஒரு முறை ராஜா கோவிலிக்கு சென்ற போது அந்த செல்வந்தர் தன்னிடம் வாங்கிய கடனைத் தீர்க்காமல் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று வழிமறித்து நின்றார்.மன்னன் அவமானப் பட்டு நின்றதைப் பொறுக்க முடியாத மக்கள் தங்களிடம் இருந்த நெல் மூட்டைகளை கொடுத்து மன்னரின் மானம் காத்தனர்.இப்படியாக கோயில் முற்றத்தில் நெல் மூட்டைகள் குவிந்தன.அப்படி குவிந்த நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லுமாறு அந்த செல்வந்தருக்கு கட்டளை இட்டார் மன்னர்.அன்று உச்சி கால பூஜை தொடங்கும்முன் அந்த நெல் மூட்டைகள் அகற்றப்பட வேண்டும் என்பது அவரது ஆணை.எவ்வளோ முயன்றும் அந்த மூட்டைகளை அங்கிருந்து அகற்ற முடியவில்லை எனவே அந்த செல்வந்தர் நெல் மூட்டைகளை கோவிலுக்கே தானம் செய்து விட்டு சென்றார்.அந்த நெல்லை அரிசியாக்கி பால் பாயசமாக செய்து எல்லா பக்தர்களுக்கும் பிரசாதமாக கொடுத்தார்களாம்.
மற்றொரு கதையின்படி ஒரு சமயம் ஒரு முனிவர் சென்பகசெரி ராஜாவுடன் சதுரங்கம் விளையாடி தோற்றுப்போனால் அதற்கு பரிசாக நெல் மணிகளைத் தரும்படி கேட்டுக் கொண்டார்.அப்பொழுது அப்படியே தருகிறேன் என்று சம்மதித்த அரசர் பந்தயத்தில் தோற்றுப்போய் மொத்தமாக ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் வைத்தும் மொத்த கட்டிடத்தை நிரப்ப முடியாமல்,தன்னிடம் சதுரங்கம் விளையாடுவது சாட்சாத் அந்த கிருஷ்ண பெருமானே என்று உணர்ந்து வேண்டிக் கொள்ள,கிருஷ்ணபிரான் தனக்கு அந்த நெல் மூட்டைகள் வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக அந்த நெல்லை அரிசியாக்கி தினமும் பால் பாயசம் தயாரித்து நிவேதனம் செய்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருமாறு கூறி மறைந்து விட்டார். இதுவே பால் பாயசம் பிரசாதமாக கேட்ட கிருஷ்ணனின் கதை.
இந்தக் கோயில் கிழக்கு தரிசனமாக உள்ளது.கோபுர வாசலைத் தொடர்ந்து குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.பிரம்மாண்டமான பிரகாரம் உள்ளது.கருவறையில் இரண்டடிக் கண்ணன் இருபுறமும் துவார பாலகர்கள் நிற்க அருள்பாலிக்கிறார்.கண்ணன் நம்மைப் பார்த்து சிரிப்பது போல் உணரும் உணர்வு மட்டில்லா மகிழ்ச்சி தரும்.
விழாக்கள்:
ஐப்பசி மாதம் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.மேலும் தை மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடக்கும்.இந்த கிருஷ்ணனிடம் வந்து என்ன வேண்டினாலும் அது கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்……
இந்த அம்பலப்புழை கிருஷ்ணனை தரிசித்து அந்த பால் பாயச பிரசாதத்தை உண்டு கிருஷ்ணனின் அருளைப் பெறலாம் வாருங்கள்……
The post அம்பலப் புழை கண்ணன் கேட்ட அரிசி பால் பாயசம் appeared first on Swasthiktv.